அன்னத்தை மதியை கிளியை
என்னத்தை விடுவேன் தூது? -உன்
கன்னங்கள் கவி சொல்லும்!
கண்களில் ஒளி மின்னும்!
மின்னலே சிரிப்போ? -நறுங்
கன்னலே குரலோ?
பின்னலே நடையோ? -பூந்
தென்றலே உடையோ?
கயல்களே விழியோ? -படர்
கொடியென உடலோ? -பூத்த
காந்தலே விரலோ? -அன்ன
பெடையென நடையோ?
உயிர்த்த சிற்பமோ? -இங்கு
உலவிடும் பூவோ?
இதழ்கள் கொவ்வையோ? -அதில்
இனிப்பது கற்கண்டோ?
சங்கு தான் கழுத்தோ? -அதில்
சங்கராபரணமே இசையோ?
மோகனராகமே உந்தன்
மேனியில் பிறந்தது தானோ?
பொங்கும் அழகெல்லாம்
தங்கியே வாழும் இடையோ?
கங்குல் தானடி தோகை -அதில்
அம்புயம் மலர்வது ஏனோ?
யாழ் இனிமை உன் குரலோ? -உயிர்த்
தோழி நீ எனக்கோ?
வாளென விழியோ? -எனை
வதைப்பது சரியோ?
பூவே உன் இருப்பிடமோ? -இதழ்
புன்சிரிப்பே மந்திரமோ?
பாவே உன் கொலுசோ? -அது
பாடுவது புதுத் தமிழோ?
பூத்த புதுப் பூவோ? -நான்
யார்த்த புதுக் கவியோ?
சேர்த்த பசும் பொன்னோ? -இல்லை
கோர்த்த வெண் முத்தோ?
நிறம் மாறா முருக்கம் பூ
உன் முகமோ?
நியமாகத் தா எனக்கு -ஒரு
புதுக்கவிதை!
பச்சரிசிப் பல்லோ? -கூந்தல்
பரவிய கார் முகிலோ?
மல்லிகை வாசம் உன் மேனியோ?
அல்லியே அதில் அலங்காரமோ?
வில்லே புருவமோ? -அதில்
வளைந்தது என் மனமோ?
தேன் தான் உன் உடலோ?
தீந்தமிழ் தான் உன் பெயரோ?
No comments:
Post a Comment